பிரதமர் நரேந்திர மோடியை தனது ‘பிடித்த நடிகர்’ என்று அழைத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜெய்ப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் சர்மாவிடம், ‘உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் சற்றும் தயங்காமல் “நரேந்திர மோடி” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, “மோடி ஒரு தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தாமதமாக இருந்தாலும், பாஜக அரசாங்கத்தின் முதலமைச்சரே இப்போது மோடி ஒரு பொதுத் தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று சொல்லத் தொடங்கியுள்ளார்.
“மோடி கேமராவை எதிர்கொள்வதிலும், டெலிப்ராம்ப்டரைப் பயன்படுத்துவதிலும், ஆடைகளை நிர்வகிப்பதிலும், வாய்ஜாலத்திலும் நிபுணர்” என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, “நீங்கள் சொல்வது சரிதான் பஜன் லால் ஜி, பிரதமர் மோடி ஒரு நல்ல நடிகர். ஆனால் சமீபகாலமாக அவர் அதிகமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார்.