டெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டிலே அதிக அளவு கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்பது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது,   பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சத்னம் சிங் சந்து நாடாளுமன்றத்தில், கடந்த இரண்டு நிதியாண்டுகளாக நாடு முழுவதும் மாநில அரசுகள் கடன் பெற அனுமதித்த அளவு மற்றும் அதில் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன் அளவு குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதில் அளித்துள்ளார். அதில்,  , நடப்பு நிதியாண்டு மற்றும் முந்தைய நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த GSDP-யில் 3% மாநில அரசுகள் கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியதாகவும், மின்சாரத்துறை செயல்திறன் அடிப்படையில் தேவைப்பட்டால் கூடுதலாக 0.50% கடனை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2023-2024ம் நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு 11,11,250 கோடி கடன் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கிய நிலையில், 9,89,621 கோடி ரூபாய் கடனை மாநில அரசுகள் திறந்த வெளி சந்தையில் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-2025 நடப்பு நிதியாண்டில் 28 மாநிலங்கள் 10,89,838 கோடி ரூபாய் கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், பிப்ரவரி 28ம் தேதி வரை 8,34,243 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களில், தமிழ்நாடு எவ்வளவு கடன் பெற்றுள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

 2023-2024ம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு,  1,22,664 கோடி ரூபாய் கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், 1,13,001 கோடி ரூபாய் கடன்  பெற்றுள்ளது.

கடந்த  2024-2025ம் நிதியாண்டில் 1,24,074 கோடி ரூபாய் கடன் பெற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 1,01,025 கோடி ரூபாய் கடன் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

நடப்பு மற்றும் முந்தைய நிதி ஆண்டுகளில் நாட்டிலே அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.