டெல்லி: மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவதாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து, திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் நாடாளுமன்றத்தில் பேசினார்.

அப்போது, தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்வதும் படகுகளை பறித்துச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இதை குறித்து பேசுவது, மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்துவது மட்டுமன்றி முதலமைச்சர் நேரடியாக கடிதம் எழுதுவது என அனைத்து விதமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் மத்தியஅரசு நிலையான நடவடிக்கை எடுக்க தவறி வருகிறது என்று குற்றம் சாட்டியதுடன், மத்தியஅரசு தமிழக மீனவர்களை வஞ்சித்தும வருவதாக தெரிவித்தார்.
மேலும், மீனவர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?. மீனவர் நலனில் அக்கறை கொண்டு மீனவர்களுக்கென்று அரசு காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கவேண்டும். மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசு மீனவர் நலனுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியின் விவரங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.