ஹோலி பண்டிகையன்று மசூதிகளுக்குச் செல்லும்போது முஸ்லிம் ஆண்கள் தார்பாய் அணிய வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

“உங்கள் உடலில் ஹோலி வண்ணங்களைப் பெற விரும்பவில்லை என்றால், தார்பாலின் அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்லுங்கள்” என்று அமைச்சர் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிங், “சனாதனிகளுக்கு, ஹோலி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை” என்றார். “மசூதிகளுக்கு அருகிலுள்ள சில தடைசெய்யப்பட்ட இடங்களில் ஹோலி கொண்டாடப்படக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியல்ல” என்று அவர் கூறினார்.

‘ஹோலி கொண்டாட்டங்களை சீர்குலைப்பவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளன; “சிறைக்குச் செல்வது, மாநிலத்தை விட்டு வெளியேறுவது, அல்லது யமராஜாவிடம் செல்வது” என்று அவர் கூறினார்.

“முஸ்லிம்கள் வீட்டிலேயே ஹோலியைக் கொண்டாட வேண்டும்” என்று சம்பல் துணை காவல் கண்காணிப்பாளர் அனுஜ் குமார் கூறியதைத் தொடர்ந்து அமைச்சரின் இந்த சர்ச்சை கருத்து வெளியாகி உள்ளது.

அதேவேளையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அனுஜ் குமாரின் கூற்றை ஆதரித்து, ஹோலி பண்டிகை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.