இஸ்ரேல் பெண் உள்ளிட்ட 2 பேரை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் இன்று கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த 7ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கங்காவதி தாலுகாவில் அனேகொண்டி பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஓய்வுக்காக வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி மற்றும் அந்த விடுதியின் உரிமையாளர் ஆகிய இருவரும் கற்பழிக்கப்பட்டதுடன் அவருடன் வந்த அமெரிக்க இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கொப்பல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனேகொண்டி பகுதியில் குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான ரிஸார்ட்டுகள் உள்ளதாகவும் இங்கு வெளிநாட்டினர் உள்ளிட்ட பல சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள இந்த இடத்தில் இரவு நேரங்களில் அதன் இயற்கையை ரசித்தபடி பயணிகள் இங்கு தங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
மார்ச் 7ம் தேதி அமெரிக்க இளைஞர், 20 வயதுடைய இஸ்ரேலிய இளம்பெண் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவர்களது இந்திய ஆண் நண்பர் உள்ளிட்டவர்கள் இங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இரவு 10:30 மணி சுமாருக்கு பைக்கில் அங்கு வந்த மூன்று வாலிபர்கள் இவர்களிடம் பெட்ரோல் வாங்க பணம் தரக்கோரி வம்பிழுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதத்தின் போது அமெரிக்க இளைஞர் மற்றும் ஒடிசா மாநில இளைஞர் தவிர அங்கிருந்த மற்றொரு நபரையும் அருகில் உள்ள கால்வாயில் பிடித்து தள்ளிய அந்த வாலிபர்கள்.
அந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் இஸ்ரேலிய பெண் ஆகிய இருவரையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்ததாக தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான மூன்றாவது நபர் இன்று தமிழ்நாடு எல்லையில் கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.