சென்னை: “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். பாதுகாப்பாக இருக்கும் போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! 2026 தேர்தலில் நாம் தேர்ந்தெடுத்த அரசை மாற்றுவோம் என தவெக தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியரசு தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெண்கள் தின வாழ்த்திலும் தேர்தல் அரசியல் செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு, பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜயும் வீடியோ வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் விஜய், “எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது அம்மா, அக்கா, தங்கை, தோழியாகக் கருதுகிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே!?.
பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய. நீங்கள், நான் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவுங்க இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது.
எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே. மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீங்க. இந்த 2026-ம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்த்து உறுதியேற்போம். உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன். நன்றி, வணக்கம்.”
இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக முதல்வரின் மகளிர் தின வாழ்த்து முழுவதும் அரசின் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டதாக அமைய, தவெக தலைவர் விஜய்யின் வாழ்த்து முழுவதும் ஆளும் திமுக அரசின் மீதான குற்றச்சாட்டாகவும், ஆட்சி மாற்றத்தைக் கோருவதாகவும் அமைந்துள்ளது. வாழ்த்தில் திமுக போல, தவெகவும் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ளது.
சமீப காலமாக திமுக மக்களிடையே இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என்று உண்மைக்கு மாறான தகவல்களை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக அரசில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவதை சுட்டிக்காட்டி, தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.