சென்னை: டான்செட், சீட்டா நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான  ஹால் டிக்கெட்டுகள் இன்று மதியம் 12.30 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக்., எம்.பிளான், எம்ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் 2025 தேர்வினை எழுதி தேர்வு பெற வேண்டும். இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பம் முடிவடைந்த நிலையில்,  விண்ணப்பம் செய்தவர்கள், தேர்வை எழுதுவதற்கான  ஹால் டிக்கெட் இன்று மதியம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகிறது. தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை  பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதுகலை தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகியவற்றிற்கு (CEETA-PG) நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.

டான்செட் அறிவிப்பு (Anna University)

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (டான்செட்2025) ஜனவரி 24-ந் தேதி முதல் பிப்ரவரி 26 ம் தேதி வரை https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்தனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்கு உரிய ஹால் டிக்கெட் மார்ச் 8 ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் 16 நகரங்களில் 42 மையங்களில் நடைபெறும் தேர்வினை எழுதுவதற்கு 38 ஆயிரத்து 301 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. MCA படிப்புகளுக்கு மார்ச் 22-ந் தேதி காலையில் நடைபெறும் தேர்வினை எழுதுவதற்கு 10,287 பேரும், MBA படிப்பிற்கு மார்ச் 22 ந் தேதி மதியம் நடைபெறும் தேர்வை எழுத 22 ஆயிரத்து 806 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CEETA, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு மார்ச் 23 ந் தேதி நடைபெறும் தேர்வினை 5 ஆயிரத்து 208 மாணவர்கள் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .மேலும் விவரங்களுக்கு tnceeta@gamil.com என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் வினா விடைகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை பெறுவதற்கு செயலளார், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு, நுழைவுத்தேர்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 044-2235 8289, 044-2235 8314 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு தேர்விற்கான மாதிரி வினாத்தாள்  https://tancet.annauniv.edu/tancet/#home என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]