டெல்லி
மும்பை தாராவி பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். தமிழர்கள், முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் தாராவி பகுதியை மேம்படுத்த பல ஆண்டுகளாகவே மராட்டிய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தாராவியில் அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கிடப்பில் இருந்த நிலையில் துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த டெண்டரை ரத்து செய்த மகாராஷ்டிர அரசு, தாராவி மறுசீரமைப்பு டெண்டரை அதானி குழுமத்துக்கு கொடுத்தது. துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் இதை எதிர்த்து தொடர்ந்த வழக்குமனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அதானி குழுமத்துக்கு திட்டத்தை வழங்கும் மாநில அரசின் முடிவை கடந்த டிசம்பர் 2024 இல் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் மேல் முறையீடு செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஆயினும், இந்த திட்டம் தொடர்பான அனைத்து பண பரிமாற்றங்களும் மூன்றாம் தரப்பு வாயிலாக அதாவது எஸ்க்ரோ கணக்கு வழியாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மராட்டிய அரசு, அதானி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, மே 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.