கள்ளக்குறிச்சி: கலைஞர் கனவு இல்லம் திட்ட முறைகேடு நடைபெறுவதாக கூறி  கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு  திமுகவினர் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

 

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடியிருப்புகளை முறையான பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்றும், எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறி  திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் பயனாளிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பணி ஆணை வழங்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.  இதற்கான பயனாளிகள் தேர்வில் பாராபட்சம் நிலவுதாக புகார்கள் எழுந்தன. பயனாளிகளிடம் பேரம் பேசி குடியிருப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண எம்எல்ஏ மணிக்கண்ணன், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் திமுக கட்சிப் பிரமுகர்களை திருநாவலூருக்கு  அழைத்து, தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த நாற்காலிகளை சேதப்படுத்தி விட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அங்கு அலுவலக வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக எம்எல்ஏக்கு எதிராக  திமுகவினரே கொடி பிடித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அரசின் வழிகாட்டுதல்படியே. கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு நடைபெறும்” என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை சமாதானப்படுத்த,  போராடி மற்றொரு தரப்பு திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து  கலைந்து சென்றனர்.