சென்னை: எழும்பூர் முதல் கடற்கரை வரை அமைக்கப்பட்டு வந்த 4வது இருப்புபாதை பணி நிறைவு  பெற்றுள்ளது. அங்கு விரைவில் சோதனை ஒட்டம் நடத்தப்பட்ட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரூ.274 கோடி மதிப்பில்,  சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்கும் பணி கடந்த ஒராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள்  100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, எழும்பூர் – கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், 4-வது பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து, 4-வது பாதை அமைக்கும் பணி ரூ.274.20 கோடி மதிப்பில், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணி காரணமாக, கடற்கரை – சிந்தாரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ரயில் பாதை பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. பணியை முடித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர், நிலத்தைப் பெற்று, பணிகள் மீண்டும் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதேநேரம், தண்டவாளம், சிக்னல் அமைப்பு மற்றும் மின்சாதனம் நிறுவுதல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தற்போது அந்த இருப்பு பாதைக்கான பணிகள்  100 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.  இது மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதை ஆகும். இந்த பாதையில் இன்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொள்ள உள்ளார்.   அவரது அனுமதி கிடைத்தவுடன்  எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது பாதையில்  ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.