சென்னை:  கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்தில் இருந்து  ரயில் நிலையத்துக்கும் இடையே  நடைமேம்பாலம் அமைக்க நிலம்கையகப்படுத்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அறிவித்து உள்ளது.

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மாநகர் பகுதிக்குள்  பயணிகள் செல்ல கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முறையான மாநகர பேருந்து வசதிகள் பல பகுதிகளுக்கு இல்லாததால், பெரும்பாலான பயணிகள், அருகே உள்ள ரயில் நிலையங்களை தேடி அலைகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் தங்களது லக்கேஜ்களுடன் பயணிப்பது பெரும் சிரமமாக உள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று மத்தியஅரசும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பேருந்து முனையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரச முடிவு செய்தது.

இதற்காக அப்பகுதியில் ஒரு ஏக்கர் 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்தாண்டு (2024)  ஜனவரியில் அறிவி்ப்பு வெளியிட்டிருந்தார். இதற்கான ஆட்சேபங்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் பொது பயன்பாட்டுக்காக இந்த நிலம் தேவைப்படுகிறது என ஆட்சியர் கடந்தாண்டு ஜூனில் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார். இது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து பிரீமியர் லெதர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ‘‘நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான அறிவிப்பை சட்ட ரீதியாக தமிழக அரசின் அரசிதழில் தான் வெளியிட வேண்டும். ஆனால் செங்கல்பட்டு ஆட்சியர் மாவட்ட அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவறானது.

மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக,  பொதுமக்கள் தங்களது ஆட்சேபங்களை தெரிவிக்கும்முன் இந்த நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என ஆட்சியரே ஒருதலைபட்சமாக அறிவிக்க முடியாது.  இந்த  , நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வில்லை என்பதால் இதுதொடர்பான மாவட்ட ஆட்சியரின் இருஅறிவிப்புகளும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும்,  ‘ மாவட்ட நிர்வாகம்,  உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி நடைமேம் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை மீண்டும் தொடரலாம்’’, என உத்தரவிட்டார்.