டெல்லி: போபர்ஸ் பீரங்கி ஊல் வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ.64 கோடி ஊழல் நடைபெற்றதாக, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட பலர்மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதுதொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்படி, 1999-ம் ஆண்டு முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் பத்நகர், போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, இடைத்தரகர் வின்சட்டா, குவாத்ரோச்சி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பின்னர் இந்த வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. (முன்னதாக ராஜீவ்காந்தி 1991ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலால் கொல்லப்பட்டார்) தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துஜா சகோதரர்கள் உள்பட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் டெல்லி ஐகோர்ட்டு 2005-ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. எனினும் இந்த விசாரணை மிகவும் மந்தமாக இருந்தது.
இந்த நிலையில் போபர்ஸ் வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களை கேட்டு மத்திய அரசு தரப்பில் அமெரிக்க நீதித்துறைக்கு சி.பி.ஐ. சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமான பேர்பாக்ஸின் தலைவர் மைக்கேல் ஹெர்ஸ்மேன், சுவிடன் ஆயுத உற்பத்தியாளர் ஏ.பி. போபர்ஸ் ஆகியோர் இந்தியாவில் இருந்து பீரங்கி வாங்குவதற்கான ஆர்டரை பெறுவதற்கு செலுத்தியதாக கூறப்படுவது உள்ளிட்ட வழக்கு விபரங்களை கேட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் போபர்ஸ் வழக்கு விவகாரம் சூடுபிடிக்கும் நிலை உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.