இந்தியாவிலிருந்து கனடா வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அமெரிக்க எல்லையில் 14,000க்கும் மேற்பட்ட இந்திய குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க மதிப்பீடுகளின்படி, 725,000க்கும் மேற்பட்ட ஆவணமற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறுவது குறித்த விசாரணையில், இந்தியாவில் இருந்து மனித கடத்தல் செய்யும் இந்த வலையமைப்பில் ஆயிரக்கணக்கான முகவர்கள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 4,000 முதல் 4,500 கடத்தல் முகவர்கள் உள்ளதாகவும் அதில் சுமார் 2000 பேர் குஜராத் மாநிலத்தில் மட்டும் உள்ளதாகவும் அமலாக்கத்துறை (ED) விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களுடன் கனடாவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும் இந்த சட்டவிரோத குடியேற்றதில் தொடர்பு இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.
மனித கடத்தல் மோசடி தொடர்பாக மும்பை, நாக்பூர், காந்திநகர் மற்றும் வதோதராவில் உள்ள எட்டு இடங்களில் அமலாக்கத் துறை கடந்த டிசம்பரில் சோதனை நடத்தியது.
மும்பை, நாக்பூர் மற்றும் வதோதராவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், இந்தியர்களை சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
150க்கும் மேற்பட்ட கனேடிய கல்லூரிகள் மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடனும், 112 கனேடிய கல்லூரிகள் மற்றொன்றுடனும் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு வரும் அதேவேளையில், குஜராத்தைச் சேர்ந்த இந்த மனித கடத்தல்காரர்கள் இன்னமும் தொடர்ந்து தங்கள் கனடா ஏஜெண்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த முகவர்களை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் அவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்திய முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை மாணவர் விசாக்களில் அமெரிக்க எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கனேடிய கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். இந்த குடியேறிகள் கனடாவை அடைந்தவுடன், அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்க-கனடா எல்லையைக் கடக்கிறார்கள்.
“நவம்பர் 2021 மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் குஜராத்தைச் சேர்ந்த ‘மாணவர்கள்’ சார்பாக கனடாவில் உள்ள பல கல்லூரிகளுக்கு 12,000 க்கும் மேற்பட்ட (நிதி) பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று ED அதிகாரி கூறினார்.
“கனேடிய கல்லூரிகளுக்கான இந்தப் பணம் மூன்று அல்லது நான்கு (இந்திய) நிதி சேவை நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது, அவையும் எங்கள் கண்காணிப்பில் உள்ளன.”
“கனடாவை தளமாகக் கொண்ட கல்லூரிகளால் பெறப்பட்ட ‘கட்டணம்’ கமிஷனைப் பெற்ற பிறகு தனிநபர்களின் கணக்கிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.”
இந்த கட்டண மோசடி மூலம் குறைந்தது ஒரு நபருக்கு ரூ. 55 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை கமிஷனாக பெற்றுள்ளனர் என்று அதிகாரி கூறினார்.
இந்த கடத்தல் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
“கழுதை பாதையை” விட “மாணவர்-விசா பாதை” அதிக சிரமம் இல்லாதது என்பதால் சட்டவிரோத குடியேறிகள் இதை தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.