சென்னை
சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

நேற்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ,
”வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவுகள் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீரான முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகர ஒருசில பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வடக்குத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுமார் 180 MLD குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகர குடிநீர் தேவைக்காக 1,850 மி.மீ. விட்டம் கொண்ட பிரதான குடிநீர் குழாய் வழியாக 208 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னை நகரின் போரூர் குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. போரூர் குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து சென்னையிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (27.02.2025) மாலை வண்டலூர் கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் புதுப்பாக்கத்தில் வீராணம் பரிமாற்ற குழாயில் 171 வது கிலோமீட்டர் தொலைவில் கசிவு ஏற்பட்ட காரணத்தால், வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு இரவு 10 மணியளவில் சீர் செய்யும் பணிகள் துவங்கப்பட்டது.
பின்னர், பிரதான குழாயின் கீழ்பகுதியில் ஏற்பட்ட விரிசல் கண்டறியப்பட்டு வெல்டிங் பணிகள் தொடங்கப்பட்டு குடிநீர் கசிவு 03.03.2025 அன்று மதியம் சரிசெய்யப்பட்டது. உடனடியாக வடக்குத்து குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் பணி முழுமையாக தொடங்கப்பட்டு மயிலாப்பூர். ராஜா அண்ணாமலைபுரம். நந்தனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.”
என்று தெரிவித்துள்ளது.