அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் நிகழ்ந்த மோதலால் அதிருப்தியில் உள்ள டிரம்பின் இந்த நடவடிக்கை அதன் நம்பகத்தன்மையை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைனுக்கு தற்போதுள்ள அனைத்து இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி வைக்கிறது என்று மூத்த பாதுகாப்புத் துறை மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானங்கள் மற்றும் கப்பல்களில் போக்குவரத்தில் உள்ள ஆயுதங்கள் அல்லது போலந்தில் போக்குவரத்துப் பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்கள் உட்பட, உக்ரைனில் தற்போது இல்லாத அனைத்து அமெரிக்க இராணுவ உபகரணங்களும் இடைநிறுத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இடைநிறுத்தத்தை செயல்படுத்துமாறு டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு உத்தரவிட்டதாக அந்த நபர் கூறினார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கிய போரை அடுத்து உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், ரஷ்யா உடன் சமாதான பேச்சை துவங்கினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் மற்றும் உக்ரைனுக்காக ராணுவ உதவிகள் அளித்த பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை கலந்தாலோசிக்காமல் ஈடுபட்டார் டிரம்ப்.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பில் போர் நிறுத்தத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டு அமெரிக்கா கோரும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்படும்படி உக்ரைனுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.

டிரம்பின் இந்த உத்தரவை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கி செய்தியாளர்கள் முன்னிலையில் கடுமையாக பேசியதால் பெரும் பரபரப்பானதுடன் உக்ரைன் – அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் பாதியில் ரத்தானது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது கட்டளைகளை ஏற்று போர் நிறுத்த பேச்சுக்கு வரும் வரை ராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

நேட்டோ நாடுகளுடன் கைகோர்க்கும் கோரிக்கையால் தூண்டப்பட்ட ரஷ்யா-வின் சிறிய அண்டை நாடான உக்ரைன் மூன்றாண்டுகளுக்கு முன் அமெரிக்க படைபலத்தை நம்பி ராணுவ தாக்குதலில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.