சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ‘இந்தி’ கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ள பிரபல மென்பொருள் நிறுவனமான zoho தலைவர் ஸ்ரீதர்வேம்பு, தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என கூறியுள்ளார்.

மத்தியஅரசு புதிய கல்விக்கோள்கை என்ற பெயரில் 3வது மொழியை கற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ், ஆங்கிலம் மட்டுமே போதுமானது என கூறி வருகிறது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சலசலப்புக்கு மத்தியில், ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழர்கள் வணிகரீதியான வளர்ச்சிக்கு இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என்றும், குறிப்பாக தொழில்முனைவோர். பொறியாளர்கள், இந்தி கற்றுக்கொள்வது அவசியம் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு ஸ்டார்அப் துறையிலும், SAAS பிரிவில் முடிசூடா மன்னனாக இருக்கும் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு சமீபத்தில் மென்பொருள் சேவை அல்லாத பல துறையில் இறங்கி அசத்தி வருகிறார். தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஸ்ரீதர் வேம்பு குடியேறியது மட்டும் அல்லாமல் தனது ZOHO நிறுவனத்தின் முக்கிய தலைமை அலுவலகத்திற்கு நிகரான CEO அலுவலகத்தை அமைத்தார். இதைத் தொடர்ந்து தென் தமிழ்நாட்டு மாவட்டத்தில் பல ZOHO கிளைகளைத் திறந்து பல ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பினை வழங்கி வரும் ஸ்ரீதர் வேம்பு தற்போது கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகக் கருவி பிராண்டுக்காக தென்காசி மாவட்டத்தின் மத்தளம்பாறை கிராமத்தில் உள்ள ஜோஹோ அலுவலகத்திற்கு சிறிய கிராமமான மாதாபுரத்தில் புதிய தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் இருந்துகொண்டு 50க்கும் அதிகமான நாடுகளில் சாப்ட்வேர் சேவை அளித்து வருவது மட்டும் அல்லாமல் சேல்ஸ்போர்ஸ், ஜென்டெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனத்துடன் போட்டிப்போடும் SAAS சாம்ராஜ்ஜியமாகவும் ZOHO விளங்குகிறது. ZOHO நிறுவனம் பிற டெக் ஸ்டார்ட்அப் போல் அல்லாமல் பூட்ஸ்டார்ப் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜியம் விரிந்துள்ளது.
இதன் நிர்வாக இயக்குனராக இருந்து வரும் ஸ்ரீதர் வேம்பு அவ்வப்போது பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்திய தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் நிதியுதவி அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்தியா வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதுபோல பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சையான நிலையில், அவருக்கு, ‘ஜோஹோ’ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்தை ஆணித்தரமாக சொல்வதில் அவர் தயங்குவது இல்லை.
இந்த நிலையில், டெல்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து வந்து பணிபுரியும் பொறியாளர்களுக்கு இந்தி தெரியாமல் இருப்பது குறை என்றும் இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என்றவர், இந்தியாவில் ஸோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதால், மும்பை, தில்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, டெல்லி, மும்பை, குஜராத்தில் இருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு கடுமையான குறைபாடாகும்.
நான் வாழ்வில் முன்னறே, கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் ஹிந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது ஹிந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.