சென்னை:  ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று விமர்சித்துள்ள  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்’ என தெரிவித்துள்ளார்.

 கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய  ஓபிஎஸ்,   “எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். கட்சியின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பின்னால்தான் இருக்கிறார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர்,  ஆர்.பி. உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர் பேசும் மொழி சரியில்லை. அவர் பேசுவதை பேசட்டும். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்”  என்றார்.

அதிமுக ஒற்றிணைவதற்கான ரகசியம் என்ன என்ற கேள்விக்கு,  அதற்கான ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாது. அதனைச் சொன்னால் கட்சிக்கு தடையாக இருக்கும்.  என்று கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதில் இருந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பினர், கட்சி குறித்த பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில்,   செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை எழும்பூரில்  உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் நடைபெற்றது. இதில்  பேசிய ஓபிஎஸ், : “நமக்கெல்லாம் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் அமர பழனிசாமிக்கு எப்படி தான் மனம் வந்ததோ தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய முடியாத விதியை ரத்து செய்திருக்கிறார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம், உரிய முடிவெடுக்கும்.

கட்சிக்கென சட்ட விதிகளை உருவாக்கி, பதிவு செய்த பிறகு விதிகளில் இருந்து மாறுபட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.  3 ஆண்டுகளாக கட்சியை ஒன்றிணைக்க போராடி வருகிறேன். அனைவரும் ஒன்றிணையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வரும் காலம் தேர்தல் காலம். சில ரகசியங்கள் இருக்கின்றன. அதன்படி செயல்பட்டு, 2026-ல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்”  என்று று  கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்பி தர்மர், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “அனைவரும் ஒன்றிணைந்தால்தான் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என தொண்டர்களும், மக்களும் நினைக்கின்றனர். ஒருமித்த கருத்தோடு இணைய வேண்டும். அதற்கு சிலர் தடையாக இருக்கின்றனர். கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று, ஒற்றைத் தலைமைக்கு வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக தான் அதிமுக உள்ளது” என்றார்.