சென்னை: ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! என்ற பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டி கவர்னருக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இரு மொழிக் கொள்கையே போதும் என அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில், எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாரதியாரின் வேலைப்பாடுகள் அனைத்தும் காலம் கடந்து பேசக்கூடியவை. ராஜ்பவனில் பல சிலைகள் இருந்தாலும், பாரதியார் சிலை இல்லை. பாரதியார் குறித்த எனது அறிவு என்பது குறைவு.
கடந்த 2 நூற்றாண்டுகளாக தமிழ் மொழியில் சிறந்தவர்கள் யாராக இருந்தாலும், பாரதியாருக்கு நிகரான ஒருவர் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதியாரை தோளில் சுமக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாரதியாரின் பெயரில் பல்கலைக்கழகங்கள் இருந்தும், ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை. அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகங்களில் பாரதியாருக்கான இருக்கை அமைக்காமல் இருக்கிறார்கள். 60 ஆண்டுகளாக தமிழ் தமிழ் என்று பேசுகிறார்களே தவிர, தமிழருக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையையும் செய்யவில்லை.

தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் பாரதியாரை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாரதி மன்றங்களை அமைத்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து ஆளுநர் ரவியின் கருத்துக்க பதிலடி கொடுக்கும் வகையில், பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே – நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே – உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் – நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் – உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?”
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைப் பதிவிட்டுள்ளார்.