சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான  ஜாக்டோ ஜியோ, திட்டமிட்டபடி போராட்டம்  நடைபெறும் என அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த  ஓய்வூதியத் திட்டம்  ஆகியவற்றை ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, பிரத்திக் தாயன், சென்னை பொருளியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே திமுக சார்பில், பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிய நிலையில், தற்போது மாற்றி அறிவித்து இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய மூவர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளதை ஏற்க மறுத்துள்ள , ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும், அதில் எந்த மாற்றமுமில்லை என்றும்  தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 14ம் தேதி, அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அறிவித்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடத்த, ஜாக்டோ – ஜியோ அமைப்பு, தமிழக தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதைத்தொடர்ந்து, மாநிலம் தலைநகரங்களில் வரும் 25ம் தேதி,மறியல் போராட்டத்திற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செல்லையா அளித்துள்ள பேட்டியில், இப்படி ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது, ஏற்கனவே பலமுறை நடந்ததுதான்.. கடந்த 2015ல் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை பெற்றார்.

பிறகு 2017ல் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டம்: அப்போதுதான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” என்றார்.  அதையே தேர்தல் வாக்குறுதியாகவும் தந்தார். ஆனால்,  இதுவரை நிறைவேற்றவில்லை.

எனவே, ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது எனபது, அந்த திட்டத்தை தள்ளிப்போடும் முயற்சிதான்.. எனவே, அதனால், இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்க! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம்!

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம்: அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…