டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி, துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த போராட்டத்தின் போது,
”ஒரே நாடு ஒரே மொழியைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம், அவர்கள் ஒரே கருத்தை, ஒரே வரலாற்றை, ஒரே பாரம்பரியத்தை, ஒரே மொழியை இந்த நாட்டின் மீது திணிக்க விரும்புவதால் அரசியலமைப்பைத் தாக்குகின்றனர். அதுதான் அவர்களின் தொடக்கப்புள்ளி. அதைத்தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள்.
வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையை ஒரே கல்விமுறையாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், ஆர்எஸ்எஸ்-ஆல் அரசியலமைப்பை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் நமது மாநிலங்களைத் தாக்க முடியாது. அவர்கள் நமது கலாசாரங்கள், நமது மரபுகள், நமது வரலாறுகளைத் தாக்க முடியாது”
என உரையாற்றியுள்ளார்.