சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் அரசே டாஸ்மாக் மதுபான கடைகளை நடத்தி வரும் நிலையில், பல இடங்களில் சட்ட விதிகளுக்கு புறம்பாக 24மணி நேரமும் டாஸ்மாக் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அதுபோல பல பகுதிகளில், அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் மற்றும் கள்ளச்சாராயங்களும் விறப்னை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால்தான், கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கள்ளச்சாராய பேரிழப்பு நிகழ்ந்தது. சுமார் 68 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பல இடங்களில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் சாராய விற்பனை, மற்றும் பார்களை காவல்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயிலடியில் சட்டவிரோதமாக பார் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல்களைத் தொடர்ந்து, அங்கு ஆய்வு நடத்திய காவல்துறையினர், பார் நடத்தி வந்த கருணாநிதி, ஆனந்த், ராமசாமி மற்றும் செல்லதுரை ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஆத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பார்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் வேறு இடங்களில் சட்டவிரோத பார்கள் இருக்கிறதா என தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, டாஸ்மாக் கடை அகற்றப்பட்ட நிலையிலும், அதை ஒட்டி அனுமதியின்றி மது விற்பனையுடன் தொடர்ந்து வந்தது. இதை கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதுடன், அந்த பாரில் மது அருந்தியவர்களை உள்ளே வைத்து, பாருக்கு பூட்டு போட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுபோல 2024 செப்டம்பர் மாதம் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? என்று அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, தாரமங்கலம், குருக்குப்பட்டி, ஆத்தூர் அருகே கீரிப்பட்டி, காமலாபுரம், முத்துநாயக்கன்பட்டி, தலைவாசல் காட்டுக்கோட்டை, எம்.காளிப்பட்டி, எடப்பாடி, கெங்கவல்லி உள்பட மொத்தம் 14 இடங்களில் அனுமதியின்றி டாஸ்மாக் கடைகள் அருகில் பார்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.