மதுரை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்ற உயர்நீதிமன்றம்,  இதை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான விசிக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கை  புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-க்கு மாற்றி உத்தர விடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த விவகாரத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்ததது,  அந்த பகுதியைச்சேர்ந்த பட்டியலின மக்கள்தான் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதற்கு விசிக உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், திமுக அரசும், சிபிசிஐடி காவல்துறையினரும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தன.

இந்த வழக்கை கடந்த இரு ஆண்டுகளாக  சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வந்தது. சுமார்  2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசிக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப் பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

இந்த 2 வழக்குகளில் இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து இன்று காலை கோர்ட்டில் 2 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை வழக்கு இல்லை என கூறி புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.