டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களுக்கு மத்தியில் மக்களவை நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுமையாக வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் (ஜனவரி 31ந்தேதி) முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது. மக்களவையில் இன்று அவை கூடியதும், வழக்கமான நடைமுறைகள் முடிந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியது.

அப்போது,  மகா கும்பமேளா கூட்ட நெரிசல் பிரச்சினை தொடர்பாக உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். சபாநாயகரை முற்றுகையிட்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் அவர்களை எச்சரித்த சபாநாயகர் ஓம் பிர்லா அவை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டார். இருந்தாலும்,  மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வருகின்றன.

இதற்கிடையில் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். அதை ஏற்க மாநிலங்களவை தலைவர் மறுத்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.