மகாகும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
கும்பமேளா நிகழ்வின் போது உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பிப்ரவரி 26 மகாசிவராத்திரி வரை நடைபெற உள்ள இந்த மகாகும்பமேளா நிகழ்வில் பிப்ரவரி 2ம் தேதி வரை 34.97 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடியதாக உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவைக் காட்டிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா நிகழ்வில் நீராட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது.
2013ம் ஆண்டு நடைபெற்ற மகாகும்பமேளா நிகழ்வில் 25 கோடி பேர் கலந்துகொண்டு புனித நீராடிய நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் மகாகும்பமேளா நிகழ்வின் போதும் 45 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய மூன்று முக்கிய நாட்களில் புனித நீராடுவதை பெரும்பாக்கியமாக கருதி திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு மௌனி அமாவாசையின் போது பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து 30 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் அன்று மட்டும் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த ஆண்டின் முக்கிய நாட்களில் இறுதி நாளான வசந்த பஞ்சமி தினமான இன்று, காலை 8 மணி வரை 67 லட்சம் பேர் புனித நீராட வந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாநிர்வாணி துறவிகள் முதலில் திரிவேணியில் குளித்தனர். இதற்குப் பிறகு, பஞ்சாயத்து அகாரா ஸ்ரீ நிரஞ்சனியும் பின்னர் ஸ்ரீ பஞ்ச தஷ்னம் ஜுனா அகாராவும் அமிர்தக் குளியல் எடுத்தனர்.

ஜூனா அகாராவுடன் சேர்ந்து கின்னார் அகாராவைச் சேர்ந்த துறவிகள் மற்றும் மகாமண்டலேஸ்வரர்கள் சங்கமத்தில் புனித நீராடினர் அப்போது ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.
நாக துறவிகளுடன், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு நீராடினர்.
அதிகாலை 4:30 மணிக்கு துவங்கி மூன்று முக்கிய நேரங்களில் இந்த புனித நீராடல் நிகழ்ச்சி முடிவடைந்தது.

பிப்ரவரி 12ம் தேதி மஹி பூர்ணிமா தினத்தன்று நடைபெற இருக்கும் மற்றொரு முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சியில் அதிகளவு பக்தர்கள் வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
மகாசிவராத்திரியை ஒட்டி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைய உள்ள இந்த மகாகும்பமேளா நிகழ்ச்சி மேலும் 23 நாட்கள் நீடிக்கும் உள்ள நிலையில் மேலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.