பராசக்தி படத்தலைப்பை பயன்படுத்த நேஷனல் பிக்சர்ஸ் தடை
சென்னை
யாரும் பராசக்தி படத்தின் பெயரை தங்கள் படத்துக்கு பயன்படுத்த நேஷனல் பிக்சர்ஸ் தடை விதித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்திதிற்கு ”சக்தித் திருமகன்’ எனவும் தெலுங்கு மொழியில் இப்படத்திற்கு ‘பராஷக்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ள சர்ச்சை எழுந்தது.
சிவாஜி நடிப்பில் 1952-ம் ஆண்டில் வெளிவந்த ‘பராசக்தி’ படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம்,
“பராசக்தி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அறிமுகமான, 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.
அந்தத் திரைப்படத்தில் சிவாஜி அவர்களைக் கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார். பெருமாள் முதலியார் அவர்கள் பிடிவாதமாக சிவாஜி அவர்களையே கதாநாயகனாக நடிக்கவைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியார் அவர்களிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் “பராசக்தி”.
பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”
என்று அறிவித்துள்ளது.,