கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து பிளஸ்1 மாணவி அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி அருகே, இன்று காலை மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து தற்கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவியை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கார் ஓட்டுநரான இவருக்கும் இவரது சகோதரர்கள் அஜய் குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கும் தனியார் நிதி நிறுவனத்தின் கடன் மூலம் கார் வாங்கியது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வேல்முருகன் மனைவி ஜோதியும், மாவட்ட காவல் அலுவலகத்தில் கார்த்திகேயன் மனைவி மரகதவள்ளியும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
இதில், காவல்துறை அதிகாரிகள் சரியாக விசாரணை நடத்தவில்லை எனவும், ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தியதாகவும், அதனால், காரை ஒரு தரப்பு அபகரித்துக் கொண்டதால் அவர்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவரின் மகளான பிளஸ்1 படித்து வரும் மாணவி, மனவேதனையுடன் அங்குள்ள நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மாணவி தற்கொலை மிரட்டல் விடுத்த நீர்த்தேக்க தொட்டியாது கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் மூக்கரை விநாயகர் கோவில் அருகே உள்ளது. சுமார் 10 மீட்டர் உயர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறிய மாணவி, அதன்மீது நின்றுகொண்டு, தனது கோரிக்கையை வலியுறுத்தியதுடன், காவல்துறையினரின் நடவடிக்கையும் விமர்சித்தார். முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறினார்.
இதை கண்ட பலர் அவரை கீழே இறங்கி வரும்படி அழைப்பு விடுத்தும், அவர் இறக்க மறுத்ததால், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான கிழக்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மாணவி தன்யாவை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தீயணைப்புத் துறையினர் கீழே இறக்கி பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]