நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே தெரிவித்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் கூரை இடிந்து விழுந்ததில் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் இருந்த 14 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

ஜெ.சி.பி. உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், ஒருவர் பலியானார்.

மிகவும் மோசமான இந்த வெடிவிபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழும்பியதை பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் மக்கள் பார்த்துள்ளனர்.

ராணுவ தளவாட தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்து குறித்து கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உயர் அதிகாரிகள் இருப்பதாகவும் நாக்பூரிலிருந்து மீட்புக் குழுக்கள் விரைவில் வந்து சேரும் என்றும் கூறினார்.

மேலும், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.