சென்னை; நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாள் வேலை, 150 நாளாக உயா்த்தப்படும், ஊதியம் ரூ.300-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்றெல்லாம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் திமுக அரசு வழங்கவில்லை. இதனால், அவா்கள் தைப் பொங்கலைக் கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நூறு நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கான ஊதியத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு ஏற்கெனவே தமிழக அரசு சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், நூறு நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களை வஞ்சித்து வருகிறது மத்திய பாஜக அரசு. இந்த போக்கைக் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டத்துக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வலியுறுத்தியும் கடந்த 13-ஆம் தேதியே பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியிருந்தாா்.
இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி, தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி, நூறு நாள் வேலை திட்ட நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வாா்த்தைகூட எடப்பாடி பழனிசாமி பேசாமல் வாய் மூடி இருப்பது ஏன்? என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளாா்.