சென்னை: கனிம வளக்கொள்ளையை தடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர் சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பத்தி உள்ள நிலையில், இதற்கு திமுக அரசும், அதிகாரிகளும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
‘தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ என்று விம்சிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி. இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். திருமயம் பகுதிகளில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் மனு அளித்துவந்தார். இதனால் ஜெகபர் அலிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 10-ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகபர் அலி, “திருமயம் தாலுகா தொலையானூர் பகுதியில், ஏராளமான சட்டவிரோத குவாரிகள் இயங்கி வருகிறது. அதில் ஆர்.ஆர் என்ற ஒரு மிகப்பெரிய குரூப் இருக்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் 70 ஆயிரம் டாரஸ் லாரி கனிமங்களை வெட்டி ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், கனிமவளத்துறை அதிகாரிகள், ஆர்டிஓ, டிஆர்ஓ ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன்.
டிசம்பர் 26-ஆம் தேதி தாசில்தாரிடம் மனு அளித்தேன். அதை தாசில்தார் கசியவிட்டதால், 40 லாரிகளில் இரவு பகலாக வெட்டி எடுத்த கனிமங்களை மீண்டும் குவாரிக்குள்ளேயே கொட்டி வருகிறார்கள். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள், பத்து நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் மீதமுள்ள 30 ஆயிரம் லோடையும் அவர்கள் குவாரிக்குள் கொட்டி விடுவார்கள்.
நாங்கள் நேரடியாக தடுக்கப் போனால், 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை பயங்கர ஆயுதங்களுடன் வைத்திருக்கிறார்கள். அதனால் எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் மக்களை திரட்டி போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வரும் ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜனவரி 17-ஆம் தேதி ஜெகபர் அலி திருமயம் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. அவர்கள் 4 பேரையும் பிப் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜெகபர் அலி மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் ஜெகபர் அலி. இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.
இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த தி.மு.க., கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க., அரசு. திரு. ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை தி.மு.க., அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஜெகபர் அலி கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த திமுக அரசு. கனிமவள கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ”கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரை சேர்ந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜெகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். இந்த விசாரணையில் ஜெகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை திருமயம் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். குவாரி உரிமையாளர்ராக, அவரது மகன் சதீஷ் 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது மேலும் குவாரி உரிமையாளர் ராமையாவை போலீஸார் தேடி வருகின்றனர்.தொடர்ந்து திமுக ஆட்சியில் இது போன்ற கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகவிட்டது, சமூக ஆர்வலராக ஒருவர் கனிமவள கொள்ளை நடப்பதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யாததால் அவர் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்த உண்மை நிலை விசாரணையில் வெளியே வந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும்.
இனி இதுபோன்ற கொலைகள் எங்கும் நடக்காத வண்ணம் இரும்புகரம் கொண்டு இந்த அரசு அடக்க வேண்டும். உண்மைக்காக குரல் கொடுத்த ஒருவரை கொலை செய்தது எந்த விதத்தில் தியாயம்? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற மக்களின் கேள்விக்கு இந்த பதில் தர வேண்டும். கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மனிதநேயமக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, “ஜெகபர் அலி கொலை வழக்கில் துறை சார்ந்த அதிகாரிகள் அத்தனைபேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்று இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் வேறு எவரும் பாதிக்கப்படாத வண்ணம் காவல்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பூவுலகின் நண்பர் அமைப்பு, “தமிழ் நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இது மிகவும் கண்டனத்திற்குரியது. கனிமவளக் கொள்ளை மாபியாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழ் நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கனிமவளக் கொள்ளை தொடர்பாக செயல்படும் அரசு அதிகாரிகள், செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகபர் அலியின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெகபர் அலி:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் அருகில் உள்ள வெங்களூர் என்ற கிராமத்தை சார்ந்தவர் ஜகபர் அலி. சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர். தொடர்ச்சியாக கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்தவர். காட்டுபாவா பள்ளிவாசல் அருகில் உள்ள மெய்யப்புரத்தில் விதிமீறி செயல்பட்ட கல்குவாரியால் வீடுகள், தேவாலயம் பாதிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். பல கட்ட போராட்டங்களுக்குப்பிறகு அந்த கல்குவாரி செயல்பட அதிகாரிகள் தடைவிதித்தனர்.
மெய்யப்புர போராட்டத்தில் பெண்களை வழிநடத்தியவர் தோழர் ஜகபர் அலியாவார். அதேபோல அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் சட்டவிதிகளை காற்றில் பறக்கவிட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கல்குவாரிக்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளை தட்டி ஒட்டுமொத்தமாக புதுக்கோட்டையில் செயல்பட்ட கல்குவாரிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்ததால் தோழர் ஜகபர் அலி கல்குவாரி மாபியாக்களின் கோபத்திற்கு ஆளானார்.
சமீபத்தில் வரம்பற்றமுறையில் கனிமவளங்களை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்த கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து போராடி வந்தார்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற மனிதகுலத்திற்கான பணியில் இறுதிவரை போராடி தன் உயிரையே தியாகம் செய்துள்ளார் ஜகபர் அலி.