ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா-2 தயாரிப்பாளர்கள் ₹2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து இது தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜூனுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக உருவெடுத்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் அபாய கட்டத்தை தாண்டியதை அடுத்து அவர் சுயநினைவு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவரும் அந்த சிறுவனின் தந்தையுமான பாஸ்கர் தங்களது குடும்பத்திற்கும் மகனின் மருத்துவ செலவுக்கும் தேவையான உதவிகளை நடிகர் அல்லு அர்ஜுன் மேற்கொண்டு வருவதாகவும் இது ஒரு விபத்து என்பதால் அல்லு அர்ஜுன் மீது அரசியல் லாபத்துக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனை சந்தித்து பேசிய அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் மற்றும் தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக தலைவரும் தயாரிப்பாளருமான தில் ராஜு “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா-2 தயாரிப்பாளர்கள் ₹2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடியும், பட தயாரிப்பு நிறுவனம் ரூ. 50 லட்சமும் மற்றும் இயக்குனர் சுகுமார் சார்பில் ரூ. 50 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடி வழங்கப்படுவதாக” கூறினர்.

மேலும், தில் ராஜு தலைமையில் திரைப்படத் துறையைச் சார்ந்த முக்கிய நபர்கள் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நாளை சந்தித்து பேச இருப்பதாகவும், திரைப்படத் துறையினருடன் நிலவி வரும் மோதல் போக்கை சுமூகமாக தீர்க்க இந்த சந்திப்பு உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.