கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைசிகிச்சையை மேற்பார்வையிட்ட டாக்டர் முருகேஷ் மனோகர், அறுவை சிகிச்சை மிகவும் சிறப்பாக நடந்ததாகவும், சிவராஜ்குமார் சீராக குணமடைந்து வருவதாகவும் கூறினார். “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பையை நாங்கள் முழுவதுமாக அகற்றி, அவரது குடலைப் பயன்படுத்தி ஒரு செயற்கை சிறுநீர்ப்பையை புனரமைத்தோம்,” என்று நடிகர் சிவராஜ்குமார் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவண்ணா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் 62 வயதான நடிகர் சிவராஜ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சென்ற வாரம் அவர் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் விரைவில் குணமடைந்து சில வாரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் ரசிகர்களின் ப்ரார்தனைகளுக்காக நன்றி தெரிவித்துள்ளார்.