காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறும் வகையில்,  வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி பாமக  பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது.  இதற்கிடையில்,  ஏற்கனவே எம்ஜிஆர் ஆட்சி காலத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர்,  மறைந்த ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்தி,  சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில்  சேர்த்தது.  அன்பின்னர், மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான  தமிழக அரசு, 2009-ஆம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது.  இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து,  அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு சாதகமாக  SC, ST பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்’ என்ற தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு 1.8.2024 அன்று வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து வன்னியர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக கோரி வருகிறது. பாமகவின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு,  தமிழக சட்டப்பேரவையில்,  வன்னியர்களுக்கு 10.5% தனி உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற்றியது.  தற்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு  வழங்கப்பட்டு வரும்  20% இடஒதுக்கீட்டில்,  வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு, மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த உள்ஒதுக்கீட்டை வேறு சில வகுப்பினர் தொடர்ந்த வழக்குகள் காரணமாக  வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

அதாவது, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னிய சமூக மக்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு அளித்தது. சட்டமன்றத் தேர்தலை கணக்கில் வைத்தே அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு அளித்ததாகவும் பேசப்பட்டது.

ஆனால், 2021ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் செய்வதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட வன்னியர் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?” எனக் கேள்வியெழுப்பிவிட்டு, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தனர்.

அதன்பிறகு, பாமக சார்பில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உள்ஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாமக தலைவர்கள் தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில், திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் 2024 டிசம்பர் 24ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை கண்டித்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் போராட்ட கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ” தமிழக முதலமைச்சர், உடனடியாக வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு அளித்தால், 2026 தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். நீங்கள் ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க போதும், எங்களுக்கு சீட்டு, பதவி வேணாம். இந்த சமுதாய வாக்குகள் மொத்தமும் உங்களுக்கு வாக்களிக்கும்.

ஆனால், அப்படி நீங்கள் உள்இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், வீடு வீடாக பிரச்சாரம் செய்வோம். வன்னியர்களுக்கு விரோதி என்று பிரச்சாரம் மேற்கொள்வோம். அடுத்த தேர்தலில் மானமுள்ள ஒரு வன்னியன் கூட வாக்களிக்க மாட்டான். அதை எப்படி செய்யணும் என்று எங்களுக்குத் தெரியும்.

இது சமூக நீதி போராட்டம். இதனை உங்கள் கட்சியில் சிலர் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அதனை கூட கண்டிக்க உங்களால் முடியவில்லை. இதனை மத்திய அரசு செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன உங்களுக்கு பயம்? இந்த சமுதாயம் இவளோ சீட்டு கேட்ருவாங்க, இந்த சமுதாயம் மாவட்ட செயலாளர் பதவி கேப்பாங்க. இந்த சமுதாயம் அது கேப்பாங்கனு பயம், அந்த கணக்கை மனதில் வைத்து தான் இன்னும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளார்.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். அதனை, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. தெலுங்கானாவில் 27 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளார்கள். ஆந்திரா, கர்நாடகா, பீகாரில் நடத்திம்முடித்துவிட்டார்கள். ஒடிசா, ஜார்கண்ட்டில் அடுத்து நடத்த உள்ளனர். ஆனால், சமூகநீதி என்று வசனம் பேசும் திமுக இன்னும் அதனை நடத்தவில்லை. சமூக நீதிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை.” என ஆவேசமாக பேசினார்.