சென்னை: இலங்கை அரசு, கடந்த 10ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தரக்கோரி தமிழக மீனவர்கள், இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கச்சத்தீவு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது. அன்றுமுதல், தமிழக மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்கச் சென்றால், அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகிறது. இது தொடல்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில், சமீப காலமாக தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர், அவர்களின் பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இநத் நிலையில், கடந்த பத்தாண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான 365 தமிழக படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கியுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆா்டிஐ) இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதில் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
‘கடந்த 2014 முதல் 2024, ஆகஸ்ட் வரை இலங்கை கடற்படையால் மொத்தம் 558 தமிழக மீனவா்கள் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நிகழாண்டு பறிமுதல் செய்யப்பட்ட 13 படகுகள் உள்பட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகள் இலங்கையால் தேசியமயமாக்கப்பட்டது.
மீதமுள்ள 193 படகுகள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், சட்டச் சிக்கலால் 21 படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கையிலேயே உள்ளன.
இதில், தற்போது, 12 படகுகளை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு இலங்கை தரப்பில் தற்போதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
மீதமுள்ள 9 படகுகளை மீட்பதற்கான பணிகளை தமிழக மீன்வளத்துறை தொடங்கவில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.