சபரிமலை
சபரிமலையில் வரும் 25 மற்றும் 26 தேதிகளில் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
வரும் 26 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடக்க உள்ளதால் 25 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பசாமிக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இதையொட்டி திருவிதாங்கூர் தேவஸ்தானம்,
”ஆன்லைன் முன்பதிவு மூலம் தற்போது தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 ஆயிரத்து 853 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் உடனடி தரிசன முன்பதிவு மூலமாக மட்டும் 22 ஆயிரத்து 703 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
வரும் 24 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (70,000) ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், 25, 26 ஆம் தேதிகளுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. இவ்விரு நாட்களும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 25 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 26 ஆம் தேதி மண்டல பூஜை நாளில் 60 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் முன்பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடனடி தரிசன பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்”
என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.