டெல்லி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெவ்வேறு ஜிஎஸ்டி பிரிவுகளில் பாப்கார்ன்களுக்கு வரி விதிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்
நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 55வது கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்றும், பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஒரே பொருளுக்கு இவ்வாறு வேறு வேறாக வகை பிரித்து ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது குழப்பங்களை ஏற்படுத்தியது. ஏற்கனவே கிரீம் பன்னுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. முறை, பெரியளவில் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், பாப்கார்னுக்கு வெவ்வேறு வகையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிராக சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக,
“கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் வகையில் அவற்றுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. சாதாரண பாப்கார்ன், உப்பு வகை உணவுகளில் (Namkeen) வருவதால் 5 சதவீத வரியும், அதுவே பேக்கேஜ் செய்யப்பட்டதாக இருந்தால் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டுள்ளது”
என்று விளக்கம் அளித்துள்ளார்.