திருநெல்வேலி
திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகல் ஆபத்தானவை அல்ல என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது நடைபெற்று வருகிறது. குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்குக் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன.
கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாகத் தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கேரள மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து வரும் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,
“நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை அல்ல. மருத்துவக் கழிவுகளில் சோதனைக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்கும். இன்று அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு நாளை கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்”
என்று தெரிவித்துள்ளனர்.