டெல்லி: இந்தியர்கள் 26 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்களை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்துள்ள வெளியுறவு விவகாரங்கள் இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங், உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டுகளுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப்பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவரிசை முறை எதுவும் இல்லை.
வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்திய பாஸ்போர்ட்டுக்கு 26 நாடுகள் (அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், பூடான், மலேசியா, மாலத்தீவு, செர்பியா, பிலிப்பைன்ஸ், ருவாண்டா உள்ளிட்டவை) விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன.
விசா இல்லாத நாடுகள், ‘ஆன்-அரைவல்’ விசா நாடுகள் பற்றிய வெளியுறவு அமைச்சகத்தின் பட்டியலில் இ-விசாவை பயன்படுத்தி 58 நாடுகளுக்கு பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இவற்றை பயணிகள் அந்தந்த நேரத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
40 நாடுகள் “ஆன்-அரைவல்” வசதியை (கிளம்பிச்செல்லும் தருவாயில் பெற்றுக்கொள்ளலாம்) வழங்குகிறது. இந்த விவகாரம் அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளின் குடிமக்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு விசா இல்லாத நுழைவை இந்தியா வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.