டெல்லி

இன்று ஏற்பட்ட தள்ளுமுள்ளு உள்ளிட்டவைகளால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியபோது, மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. எனவே நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில், பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு, போராட்டம் ஆகியவற்றால் நாடாளுமன்ற வளாகமே களேபரமானது. இதற்கிடையே மதியம் 2 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் கூடியபோது, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.