ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டையில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்றது முதல் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதை ஒடுக்க, பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர் தீவிர ரோந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில், பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர்மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்,. இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.