சென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியைச் சேர்ந்த ஜுனைத் அகமது என்பவர் தன்னிடம் வேலை செய்து வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கௌஸ் என்பவரை புதிதாக சி.டி. ஸ்கேன் மிஷின் ஒன்றை வாங்கச் சொல்லியுள்ளார்.
அதற்காக ரூ. 20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற முகமது கௌஸிடம் திருவல்லிகேணியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் இருந்து மேலும் ரூ. 10 லட்சத்தை வாங்கிச் செல்லும்படி கூறியிருந்தார்.
20 லட்ச ரூபாய் பணத்துடன் தனது பைக்கில் திருவல்லிக்கேணி சென்ற முகமது கௌஸை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிலையம் அருகே சீருடையில் நின்றுகொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பைக்கை மடக்கியுள்ளார்.
சோதனையில் அவரிடம் கணக்கில் வராத பணம் இருப்பதை அறிந்த உதவி ஆய்வாளர் இதுகுறித்து மொபைல் போனில் தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த மூன்று பேர் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி முகமது கௌஸை மிரட்டியதுடன் தங்களுடன் விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.
எழும்பூர் அருகே செல்லும்போது அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு அவரை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி விட்டதை அடுத்து செய்வதறியாமல் ஜுனைத் அகமதுக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ராஜா சிங்-கிற்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ராஜா சிங்-கிடம் நடத்திய விசாரணையில் முகமது கௌஸ் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
இருந்தபோதும் திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குள் சிக்கிய நபர் குறித்து காவல்நிலைய பதிவேட்டில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் நேரடியாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எப்படி ஒப்படைக்கலாம் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதேவேளையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய மூன்று பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், உதவி ஆய்வாளர் ராஜா சிங், மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய நான்கு பேரும் கூட்டாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் முகமது கௌஸிடம் இருந்து பறிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் பணத்தை தலா ரூ. 5 லட்சமாக பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் நான்கு பேர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முகமது கௌஸ் திருவல்லிக்கேணி வருவது குறித்தும் அவரிடம் ஹவாலா பணம் இருப்பது குறித்தும் இவர்களுக்கு தகவல் கொடுத்தது யார் என்பது குறித்தும் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.