சென்னை :  மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய கவுண்ட்டர்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் தினசரி 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர்  வரை பயணம் செய்கின்றனர்.  விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் எடுக்கும் வகையில், ஆன்லைன் வசதி, யுபிஐ வசதி என பல வகைகளில் எளிதாக பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  இன்று காலை  முதல் மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்தபோது செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பயணிகள்  சமூக வலைத்தளங்களிலும், மெட்ரோ நிர்வாகத்துக்கும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் செர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ஆன்லைன் டிக்கெட் எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும்,  எக்ஸ் வலைத்தள பக்கத்தில்  கூறியுள்ளது.

 இது குறித்து மெட்ரோ  நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் ” ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தற்காலிக சிக்கல்களால், பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. CMRL ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது” என கூறியுள்ளது.