சென்னை: ஓட்டு கேட்கும் போதும் தேவைப்படும் நாங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு ஒதுக்கப்படுகிறோம் என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும் திமுக அரசு வழக்கும் நிவாரணம் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே விசிக ஆட்சியில் அதிகாரம், குடும்பஅரசியல் என கூறி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தவாக தலைவர் வேல்முருகனும் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். “ஓட்டு கேட்கும் போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிந்தவுடன் PROTOCOL என எங்களை ஒதுக்குகின்றனர், இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள் என தவாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்று எம்.எல்.ஏவானார். கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசின் மீது அடிக்கடி வேல்முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் திமுக அரசை கடுமையாக சாடினார்.
திமுக எங்களை மதிப்பதே இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களிடம் பேசுவார்கள். மற்ற நேரத்தில் எங்களை மதிப்பதில்லை என்றும், தேர்தல் வரும் போது மட்டும் தான் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எங்களுக்கு தகவல் கூட வரவில்லை என்றும் கூறினார்.
அமைச்சர்கள் எங்களிடம் பேசினால், கெளரவக் குறைச்சல் ஏற்பட்டு விடுமா என்று நினைக்கிறார்கள் என்றும், தேர்தலின் போது மட்டும் தான் அமைச்சர்கள் பேசுவார்கள், மற்ற நேரத்தில் அமைச்சர்களின் உதவியாளர்கள் தான் பேசுவார்கள் என்று கூறியவர், தமிழகத்தில் பல்வேறு தவறுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அவை முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லவில்லை என்றும், அதிமுக ஆட்சியோடு ஒப்பிடும்போது, திமுக ஆட்சியிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என்று குறித்து கேள்வி கேட்டால், கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணித்து விடுவார்கள் என்றார்.
திமுக ஆட்சியிலும், அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாகவும், மழை வெள்ளத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கூறியவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது? அவர்களுக்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளனர் என்றும், கடலூர் மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வில்லை என்றும் வேல்முருகன் கூறினார்.
எப்போதெல்லாம் தமிழகத்தில் பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பாதிக்கப்படும் இடம் கடலூர். சாத்தனூர் அணை திறப்பினால் எனது தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப அட்டைக்கு வெறும் 2 ஆயிரம் தமிழக முதல்வர் அறிவித்தார். அதுவும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவில்லை.
கடந்த 2001 ம் ஆண்டு முதல் பேரிடரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் மக்களிடமும் ஆறுதல் தான் தெரிவிக்க முடிகிறது. நான் கோரிக்கை தான் வைக்க முடியும். ஆனால் அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
துணை முதல்வர் வரும் போது பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள்வைத்தேன். ஆனால் அவர் வந்து பார்வையிடவில்லை. தனிப்பட்ட எம்எல்ஏவாக எவ்வளவு லட்ச மக்களுக்கு சொந்த செலவில் உதவ முடியும் ஏன் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2ஆயிரம் நிவாரணம் வழங்கி பிச்சையா போடுகின்றனர் என்றவர், அரசின் நிர்வாகத்திறன்மின்மையால் மக்கள் உயிர் பலியாகினர். மது குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் அரசு வழங்குகின்றது என்றார்.ஆட்சி முடிந்தால் மக்களை சந்திக்க வந்து தான் ஆக வேண்டும்.
தேர்தலின்போது முதல்வருடன் அமர வைப்பவர்கள் தேர்தல் முடிந்தவுடன் PROTOCOL வந்துவிடுகின்றது என்றும் இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்று வார்கள் என ஆவேசகமாக பேசிய வேல்முருகன் ,
அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதல்வருக்கு தெரிகின்றதா?இல்லையா? ஐஏஎஸ் ஐபிஎஸ் என தவறு யார் செய்தாலும் தவறு தான் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றவர், தமிழகத்தை பேரிடம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சட்டசபையை குறைந்தது பத்து நாட்களாவது நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன், ஆனால் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தி உள்ளார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திமுக ஆட்சி மீது அடுக்கடுக்காக வேல்முருகன் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://chanakyaa.in/watch/jpDlr88ouyqlHK9