திருப்பாவை –  பாடல் 1 – விளக்கம்

 

இன்று பிறக்கும் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில்,

மார்கழி மாதத்தின் முதல் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 1.

திருப்பாவை பாடல் 1:

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார் ஆண்டாள். இனிதே துவங்கியிருக்கின்ற மார்கழி மாதத்தில் முழு நிலவு ஒளி வீசும் நன்னாள் இது. அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே, ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமியர்களே!.. இன்று நாம் நீராட கிளம்புவோம். 

கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபர், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கின்றான். அவரைப் பாடி புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும்.