சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.
இன்று காலை முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை 8:30 முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 10 செ.மீ. பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அயப்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அம்பத்தூர், ஆலந்தூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் பெருமளவு மழை ஓய்ந்துள்ள போதும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.