திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும், அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழாவின் முக்கி நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், மகாதீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், கார்த்திகை மாத தீப திருவிழா டிசம்பர் 4ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் முடிவடைந்த நிலையில், நாளை மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
நாளை அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் அனேகன், ஏகன் என்பதை விளக்கும், மஹாதீபமும் ஏற்றப்பட உள்ளன.
இதற்காக, ஐந்தரை அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த கொப்பரையானது 150 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்புத்தகட்டில் செய்யப்பட்டுள்ளது. தீபம் ஏற்றும்போது, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க தேவையான வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பதுடன், இந்த கொப்பரையை மலைஉச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் பாகம் நான்கு வளையம், கீழ்பாகம் நான்கு வளையம் பொருத்தப்பட்டுள்ளன.
இவை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என, வாசகம் எழுதப்பட்டு, விபூதி பட்டையுடன் கூடிய லிங்க படமும், தீபவிளக்கில் அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் போன்று, படம் வரையப்பட்டு, நேற்று கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது. அதுபோல, மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 3500 கிலோ ஆவின் நெய், மேலும் மகா தீபம் ஏற்றப்படும் காடா துணி உள்பட அனைத்து பொருட்களும், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொப்பறை எடுத்துச் செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது வழி பயன்படுத்தப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஏற்கனவே தெரிவித்த நிலையில், அந்த வழியாக மகாதீப கொப்பரை மற்றும் நெய், காடா துணி போன்ற தீபம் ஏற்றுவதற்கனா பொருட்களை அதற்கென நியமிக்கப்பட்டு உள்ளவர்கள் மலை உச்சிக்கு கை சுமையாக எடுத்துச்சென்றார்கள்.