திருச்சி: திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
சமீப காலமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் போதைபொருள் கடத்தல் நடைபெறுவது அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் 6-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் கவுராவில் இருந்து சென்னை வழியாக வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
அந்த ரயிலில் இருந்து இறங்கி பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை இட்டனர். அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து நழுவ முயன்றார். இதை கண்ட ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிரடியாக அந்த நபரை, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, அவர் வைத்திருந்த பையில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த முழு பணத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை எண்ணியபோது, அதில், மொத்தம் ரூ.75 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர், ஆரோக்கியதாஸ் (வயது 49) என்பதும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணஙட ஹவாலா பணம் என தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா மற்றும் அதிகாரிகள் வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ரெயில் நிலையம்
[youtube-feed feed=1]