2023 பேட்சில் கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஹர்ஷ் பர்தன், பதவியேற்க செல்லும் போது கார் விபத்தில் பலியானார்.

26 வயதான ஹர்ஷ் பர்தன் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி பெற்றுவந்துள்ளார்.

மைசூரில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சி முடிந்ததை அடுத்து ஹாசன் மாவட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஹர்ஷ் பர்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று காரில் ஹாசன் சென்றார்.

ஹோலேநரசிபூரில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்க சென்ற அவரது கார் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த வீடு மற்றும் மரத்தில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹர்ஷ் பர்தன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பயிற்சி முடித்து ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்க சென்ற இளம் ஐபிஎஸ் அதிகாரியின் மரணத்திற்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா மற்றும் முன்னாள் முதலவர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.