டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக,லோக்சபா, ராஜ்யசபா  ஆகிய இரண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதல்வர், எதிர்க்கட்சிகள்,  அதானி விவகாரம், உ.பி. கலவரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்த விவாதிக்க வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால், அதை ஏற்க சபாநாயகர் மறுத்த நிலையில், அவையில் கோஷம் எழுப்பி அவையை நடத்த விடாமல் முடக்கி வருகின்றனர்.

இன்று 3வது நாளாக அவை கூடியதும்,  புதிதாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரியங்கா, ரவீந்தர் சவான் எம்.பி.யாக பதவியேற்றனர். அதை தொடர்ந்து சமாஜ் வாடி உறுப்பினர்கள் உ.பி. வன்முறை குறித்த விவகாரத்தை கிளப்பினார்கள். அதானி விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மேல் சபையிலும் இதே நிலை நீடித்தது. அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் மறறும் உ.பி. வன்முறை குறித்து எதிர் கட்சி எம்.பி.க்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இரு அவைகளும் இன்று 3-வது நாளாக முடங்கியது.