மும்பை அந்தேரி மரோல் பகுதியில் ஏர் இந்தியா பெண் விமானி சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சிருஷ்டி துலி (25) ஏர் இந்தியா விமானியாக பணிபுரிந்து வந்தார் இவர் மும்பை மரோல் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இவருடன் பைலட் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா பண்டிட் (27) அதில் தேர்ச்சி பெறவில்லை என்றபோதும் கடந்த சில மாதங்களாக இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
சிருஷ்டி துலி – ஆதித்யா பண்டிட் இருவரும் காதலிப்பதாகக் கூறப்படும் நிலையில் சுத்த சைவ உணவு பழக்கம் உடைய பண்டிட்டுக்கு சிருஷ்டி துலி அசைவ உணவு சாப்பிடுவது சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் உணவுப் பழக்கம் குறித்து இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் இந்த வாய்த்தகராறு பலரும் அறிந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த திங்களன்று இரவு சுமார் 1 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லி செல்ல ஆதித்யா பண்டிட் திட்டமிட்ட நிலையில் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட சிருஷ்டி துலி தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிருஷ்டி துலி-யின் வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவரது வீடு உட்புறம் பூட்டியிருந்ததை அடுத்து சாவி செய்பவரை அழைத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கு பேச்சுமூச்சு இல்லாமல் இருந்த சிருஷ்டி துலியை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக கோரக்பூரில் உள்ள சிருஷ்டி துலி-யின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், சிருஷ்டி துலி-யின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை அசைவம் சாப்பிடக்கூடாது என்று ஆதித்யா பண்டிட் தொந்தரவு செய்ததை அடுத்து அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும் அவரது உறவினர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஆதித்யா பண்டிட்டை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் அசைவம் சாப்பிடுவது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதையும் மரணத்துக்கு முன் கூட இவர்கள் இருவருக்கும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் நிகழ்ந்ததையும் உறுதிப்படுத்தினர்.
பிரேத பரிசோதனையில் இது தற்கொலை என்று உறுதிப்பட்டதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா பண்டிட் மீது வழக்கு பதிவு செய்து மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.