டெல்லி: வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மக்களவை எம்.பி.யாக பதவி ஏற்கிறார். இதன் மூலம் அவர் முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.
ஏற்கனவே அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் எம்.பியாக உள்ள நிலையில், தற்போது பிரியங்காவும் அவருடன் இணைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் எம்.பி.யாக பாராளுமன்றத்திற்குள் மக்கள் பணியாற்ற சென்றுள்ளனர்.
ராகுல்காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெற்ற நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் மாநில அரசான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார், பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அண்ணன் ராகுல் காந்தியிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இதன்மூலம் ராஜீவ் காந்தி குடும்பத்தில் இருந்து மற்றொரு நபர் பாராளுமன்றம் செல்கிறார். ஏற்கனவே சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். ராகுல் காந்தி மக்களவை எம்.பி. மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ஆக ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூன்று பேரும் எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்குள் இருக்கின்றனர்.